Fathima Naleera. Powered by Blogger.

Sunday, October 21, 2012

தோற்றுப் போகும் திருமணங்களும் வெற்றி பெறும் விவாகரத்துகளும் - பாத்திமா நளீரா

















மத, சமயம் சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு பண்பாட்டு கலாசார ரீதியாகவும் சட்ட அங்கீகாரத்துடனும் இருமனங்களின் உறுதிமிக்க ஒரு ஒப்பந்தமாகத் திருமணம் அங்கீகரிக்கப்படுகின்றது. வயதுக்கும் வாழ்க்கைக்கும் வேலியாக அமைவதுடன் பொறுப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல், மன்னிப்பு இப்படி அனைத்துக் கலவைகளும் கலந்த ஓர் இறுக்கமான பிணைப்புத்தான் திருமணம். அன்பும் புரிந்துணர்வும் தான் அத்திவாரம். மணவாழ்வில் திருப்தியும் மனநிறைவும் இரு கண்களைப் போன்றன என இப்படியே நீளமாக, பக்கம், பக்கமாக நீட்டிக் கொண்டே போகலாம்.

ஆனால் இன்று நடப்பது என்ன?....

மேற்கத்தைய திருமண கலாசாரத்தை (இணைவு,பிரிவு) வென்று விடுமளவுக்கு திருமண முறிவுகளும் சரிவுகளும்! வாழ்க்கையைத்  தொட்டேன், கவிழ்த்தேன் என்ற அளவுக்கு பிணக்குகள்.. முரண்பாடுகள்.. வறட்டுப் பிடிவாதங்கள்...

இன்றைய பெரும்பாலான திருமணங்கள் விடுமுறைக்குச் செல்லும்  சுற்றுலாத்தலமாக நினைத்து, குறுகிய வட்டத்துக்குள்ளேயே உல்லாச விடுமுறையைக் கழித்து, அந்தக் காலக்கட்டத்திலேயே மனம் கசந்து, எல்லாக் கனவுகளும் கலைந்து, ஏதோ ஒருவகை “ஒவ்வாமை“ ஏற்பட்டு, தனித்து வாழ ஒற்றைக் காலில் நிற்கும் தன்மையைக் கொண்டனவாகவே காணப்படுகின்றன. 

திருமண பந்தத்தில் இணைந்த ஆரம்ப காலகட்டத்தில் (பெரும்பாலும் காதல் திருமணங்கள்) கனவுக்கு மேலால் பறந்து செல்லும் ஒரு விதமான கவர்ச்சியுடன் கூடிய ஈர்ப்புச் சக்திதான மிகையாகிறது. உள்ளங்களில் ஆத்மார்த்தத்தை விட உணர்வுகளின் ஆட்டிப்படைப்புதான் மேலோங்கி நிற்கிறது. நாட்செல்லச் செல்ல ஏதோ ஒருவகை தொய்வு வெறுப்புணர்வு இருமனங்களில் சிதைவை ஏற்படுத்துகிறது.

எண்ணங்களைத் தெளிவாக எடுத்தியம்பவோ அல்லது பரஸ்பர புரிந்துணர்வுக்குக் கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் முன்னரோ இருமனங்களிலும் திருமணம் பெறுமானம் இழந்து போகிறது. உள்ளங்களின் ஆரோக்கியமான தொடர்பாடலுக்கு இடமில்லாமல் தான் தோன்றித்தனமாக எண்ணங்களே முன்னணி வகிக்கின்றன. உளரீதியாக விவாகரத்துப் பெற்றவர்கள் நிறையப் பேர் இன்று எமது சமுதாயத்தில் கௌரவமாக வாழ்வதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

விவாகம் செய்வதற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி, பிரச்சினை, கஷ்டம், இவைகள் தீரும் முன்னரே விவாக விலக்கு நோட்டீஸ் பறக்கிறது. இவ்வாறான நிலைமைகளினால் பொறுப்புள்ள பெரியவர்கள் “மரபும் பண்பாடும் கலாசாரமும் எங்கே செல்கின்றன“ என்ற ஆத்மார்த்தமான ஏக்கப் பெருமூச்சையும் அங்கலாய்ப்பினையுமே கொள்கின்றனர். 

நாளொன்றுக்கு எமது இலங்கையில் எத்தனை விவாகரத்துகள் இடம்பெறுகின்றன? சுமார் இரண்டு கோடி மக்களைக் கொண்ட இலங்கையில் நாளாந்தம் 300 விவாகரத்துகள் இடம்பெறுவதாக மேல்மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது. விவாகரத்துக்கு முக்கிய பங்கு வகிப்பது புரிந்துணர்வு இன்மையாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த ஒரு வருட காலத்தில் பலர் விவாகரத்துப் பெறுவதுடன் 18 வயதுக்கும் குறைந்த 3,892 தாய்மார்கள் இலங்கையில் இருப்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறுபது சதவீதமானோரின் வாழ்வில் திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் திருமணம் கசப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது. இவ்வாறு விவாகரத்துச் செய்யும் தம்பதிகளில் அதிகமானோர் காதலித்துத் திருமணம் செய்தவர்கள் என்றும் காதலித்துத் திருமணம் செய்வோரின் திருமணங்களில் 30 சதவீதம் தோல்வியில் முடிவடைவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் 25 வயதுக்குக் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களில் 75 சதவீதமானவை தோல்வியில் முடிவடைதாகச் சுகாதார அமைச்சுச் தகவல்கள் தெரிவிக்கின்றன. (கிராமப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவருவதாகத் தெரிய வருகிறது.) தம்பதியினர் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ளாமை, அர்ப்பணிப்புடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ளாமை பாலியல் தேவைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாததுடன் பாலியல் தொடர்பில் தவறான அர்த்தம் கொள்ளுதல் போன்றன விவாகரத்துக்கான பிரதான காரணங்களில் முக்கியமானவை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றஙகளில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அதிக எண்ணிக்கையானவை விவாகரத்துச் சம்பந்தமானவைகளாகவும் மேலும் விவாகரத்துச் செய்வோர் விகிதாசாரம் அதிகரித்து வருவதாகவும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஆராய்ச்சியின்படி விவாகரத்துக்கு வழக்களுக்குப் பெரும்பாலும் “பேஸ்புக்“(Facebook) காரணமாக உள்ளது என தெரிய வந்துள்ளது. அதாவது ஐந்து வழக்குகுளில் ஒன்றுக்கு இந்தப் “பேஸ்புக்” (Facebook) காரணமாக உள்ளமை தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வக்கீல்களில் எண்பது சத வீதம் பேர் “பேஸ்புக் (Facebook) மூலமாகத்தான் விவாகரத்துகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் விவாகரத்துப் பெறும் தம்பதியினரின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிப்பு ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் சீன நீதிமன்றங்களின் மூலம் 2.87 மில்லியன் தம்பதிகள் விவாகரத்துப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் ஆண்டொன்றுக்கு விவாகரத்துப் பெறுவோரின் எண்ணிக்கைச் சராசரியாக சுமார் 7.3 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் சீன குடும்பநல அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மனைவிக்கு உதவியாகப் பாத்திரங்கள் கழுவாமையாலும் அழுக்குத் துணியைத் துவைக்காமையாலும்  முப்பது சத வீத விவாகரத்து ஏற்படுவதாக லண்டனைச் சேர்ந்த “டெய்லி எக்ஸ்பிரஸ்“ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள அவசரமான சூழ்நிலையில் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் மீண்டும் வீட்டு வேலையைத் தொடரச் சிரமப்படுகிறார்கள். அந்த நேரத்தில் கணவனின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தும் அவளின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபட்சத்தில் கருத்து வேறுபாடு பிளவுக்கு வழியமைக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

இவைகள் எல்லாம் மேலைத்தேய விவகாரங்கள். விவாகரத்துகள் என்று ஒதுக்கி விடமுடியாது. இவைகளை விடப் பல மோசமான நோய்கள் எம் நாட்டவர்களைப் பீடித்து ஆட்டிப்படைக்காமல் இல்லை.

விவாகரத்து பிரச்சினை விவகாரத்தில் நவீன யுகத்தின் அன்பளிப்பு மிக முக்கிய இடம்பெறுகிறது. உதாரணமாக, இண்டர்நெட் கையடக்கத் தொலைபேசி போன்றனவற்றைக் குறிப்பிடலாம். பல “மிஸ்கோல்“ களினால் திடீர் சந்தேகங்கள், கருத்து முரண்பாடுகள் விவாகரத்தில் போய் விடுவதுமுண்டு. ஊடகங்களில் பல கவர்ச்சியான விடயங்களும் மோகங்களும் முகங்களையும் வாழ்க்கையையும் தொலைக்கச் செய்கின்றன. நாகரீகம் எம்மைக் கைது செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நாகரீக உச்சியிலிருக்கும் ஆண், பெண் இருபாலாருக்கும் முறையான வழிகாட்டல், சமய ரீதியிலான போதனை ஏற்படுதல் குறைவு. தீமைகள் எங்கெல்லாம் முளைக்க முடியுமோ அங்கெல்லாம் முளைத்துக் கொண்டுதான் இருக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் இன்றைய எமது நடைமுறை வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் ஆன்மீகத்தில் வறுமையுமாகும். 

அடுத்ததாக, இள வயதில் நிச்சயித்த திருமணம், காதல் திருமணம் இவைகளிலும் பெரும்பாலும் மனமுதிர்ச்சி இன்மையும் பக்குவமற்ற தன்மையுமே காணப்படுகின்றன. வாழ்க்கையின் அடிப்படை எதுவென்று புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே உணர்வுகளின் ஈர்ப்பும் காதலின் சங்கமிப்பும் தான் வாழ்க்கையின் வரையறை என்று நினைத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கும் ஆரோக்கியமான வழிகாட்டல்கள் தேவை.

மேலும் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் ஒருவரை ஒருவர் கால நேர அவகாசம் எடுத்து விளங்கிக் கொள்ள வேண்டும். அதிலும் எந்த விடயமானாலும் நட்பு ரீதியிலான தளர்வான எண்ணத்துடன் அணுக வேண்டும். முழுமையாகப் புரிந்து கொண்டோம் என்ற போர்வையைக் கண்களில் பலர் போர்த்திக் கொண்டு உறங்குகின்றார்கள். திடீரென விழிக்கும் போது வாழ்க்கை கைநழுவி விழுந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தம்பதியினர் தங்களுக்கிடையே மனம் விட்டு இன்ப, துன்ப ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். குடும்பம் ஏதோ மர்ம நாவலைப் போன்றிருக்கும். இன்னுமொரு வகையில் ஏதோ ஒரு வகை ஈகோ ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். அதிலும் இந்தத்தன்மையானது ஆண்களுக்கு அதிகம். சமுதாய நோக்கு, சட்ட திட்டமெல்லாம் தனக்கு மாத்திரம்தான் என்று எண்ணிவிடுவது தவறானதாகும். மனைவியின் வரையறை இந்த வட்டத்துக்குள்தான் இருக்க வேண்டுமென சட்டம் இயற்றுவதும் நல்லதல்ல... அது நட்பு, சுதந்திரம் ஆகியனவற்றைப் பாதிக்கும். தம்பதியினர் தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் வாழ்க்கையைக் கையிலெடுத்துக் கொள்வதும் சரியான அணுகுமுறையல்ல. மிக முக்கியமாக, “சந்தேகம்“ உறக்கத்திலும் நிழலாடக் கூடாது. சிறு, சிறு உராய்வுகள் வரலாம். ஆனால் வாழ்க்கையில் வெடிப்புகள் ஏற்பட்டு கடைசியில் முற்றுப் புள்ளி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தம்பதியினர் ஒருவருக்கொருவர் கனவுகள்,தேவைகள் போன்றனவற்றை நெறிப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றச் சமுதாயத்தைப் பார்த்தோ அல்லது ஏனைய நாட்டவரை, தேசத்தைப் பார்த்தோ வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் முடியாது.

திருமணம் உறுதிமிக்க உளவியல் ரீதியான ஒப்பந்தம். இருவரும் ஒருவருக்கொருவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். முக்கியமாக நட்பு ரீதியான அணுமுறையும் நகைச்சுவை உணர்வும் தழுவிய இல்லறமாக மணம் வீச வேண்டும். புரிந்துணர்வு, மன்னிப்பு நாம் விடும் சுவாசக் காற்றாக இருந்தால் மணமுறிவு (Divorce) என்ற வார்த்தை மனமுடைந்து போகும்.

” வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயம் அல்ல..மாறாக அது அமைதியாக ஓடும் மரதன் போன்றது. இறுதி வரை ஓட வேண்டும் என்பதே அதன் விதி.. எனவே வேகமாக ஓடினால் எங்கே நிற்கிறோம் என்பதனை மட்டுமின்றி எதனை நோக்கி ஓடுகிறோம் என்பதனையும் மறந்து விடுவோம்...” - ஆல்பரி
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 20-010-2012

0 comments:

Post a Comment