Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, February 24, 2015

அதிகரிக்கும் விவாகரத்துகள்!

முஸ்லிம் சமூகத்திலுள்ள பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பருவ வயதை எட்டியவுடன் திருமணக் கவலையும் பொறுப்பாக ஒப்படைத்து விடவேண்டுமே என்ற மன உளைச்சலும் பாடாய்படுத்தி விடும். இது இயற்கையும் கடமையும்தான். சில பெற்றோர்கள் படிப்பைக் கூட இடைநிறுத்தி விட்டு மணமுடித்து கொடுத்து விடுவர். அவ்வளவு ஆவல். வேகம்.

ஆனால் மணமுடித்த கையோடு அதிவிரைவாக விவாகரத்து கோரப்படுவதுதான் கவலைக்குரிய விடயம். பெற்றவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் முன் விவாகரத்து நோட்டீஸ் பறக்கிறது.பெரும்பாலும் இன்றைய நாகரீக திருமணங்கள் இப்படித்தான் சென்று கொண்டிருக்கின்றன.

பருவமடைதல் மாத்திரமே திருமணத்துக்கான தகுதி என்று பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர். வாழ்வின் அடித்தளம் எது என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும் முன்னரே விவாகரத்தில் புரிந்துணர்வு ஏற்படுகிறது.

வயதுக்கும் வாழ்கைக்கும் ஒருவேலியாக திருமணம் அங்கீகரிக்கப்பட்டாலும் இன்று நடப்பதென்ன? தொட்டேன் கவிழ்த்தேன் என்றாகிவிடுகிறது.

ஆணையோ பெண்ணையோ குற்றம் சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. இல்லறம் இரக்கத்தில் ஆரம்பிக்கிறது என்பார்கள். இரக்கம் ஒரு கவர்ச்சி மாயையாக பிரதிபலித்து கசப்புடன் இரு மனங்களும் திருமணம் என்ற பெறுமானத்தை இழந்து விடுகின்றது. பல இளவயது திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு காரணம் மனமுதிர்ச்சியும் மணவாழ்வு பற்றிய அடிப்படையான அறிவு இன்மையேயாகும்.

தோழமை- பொறுமை-மன்னித்தல்- விட்டுக்கொடுத்தல்- நெகிழ்ச்சி- புகழ்தல்- குடும்பத்தவரை மதித்தல்- அன்பு கலந்த அக்கறை- சுதந்திரம்- விசுவாசம்- தவறு செய்யும் தன்மையை ஏற்றல்- வெளிப்படைத்தன்மை இவையெல்லாம் திருமண வாழ்வின் உளவியல் சார்பான தன்மைகள் மட்டுமல்ல இருமனங்களும் இணைந்த பின்னர் கட்டாயமாக இருக்கவேண்டிய பண்புகளாகும்.

இருவருக்கிடையே மனந்திறந்த உரையாடல் மிகக்குறைவு. பொருளாதாரமென்றால் ஆண் என்றும் சமைத்து துவைப்பது என்றால் பெண் என்றும் எண்ணி விடக்கூடாது. ஆண் சம்பாதித்தாலும் பெண்ணே குடும்பத்தை நிர்வகிப்பவள். பெண் என்ற அடித்தளம் சரியாக இல்லாவிட்டால் குடும்பம் ஆட்டம் காண தொடங்கிவிடும். குடும்பம் என்ற நிறுவனத்தை கட்டியெழுப்ப இருவருமே கடுமையாக வாழ்க்கையில் உழைக்க வேண்டும்.

இடையில் வரும் கசப்புக்கள் முரண்பாடுகள் பிணக்குகளை ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொள்ளக் கூடாது. இதுவே பிரிவுக்கு வழிவகுத்து விடும்.

இன்றைக்கு எமது இலங்கையின் மேல் மாகாணமான கொழும்பில் அதிகளவு விவாகரத்துக்கள் எம் சமூகத்திடையே ஏற்படுகிறது. அடுத்ததாக கிழக்கு மாகாணமாகும்; .18-23 வயதுக்கிடையில் அதிகளவு விவாகரத்துக்கள் இடம்பெறுவதாகவும் 60 சத வீதமான திருமணங்கள் 3 வருடத்தில் முறிந்து விடுவதாக அறியப்படுகிறது.

இவ்வாறு திருமணம் செய்தவர்களில் அதிகமானோர் காதலித்து மண முடித்தவர்களென்றும் அப்படிப்பட்ட திருமணங்களே அதிகமாக முறிவு ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது. திருமணத்திற்கு பிந்திய அன்பே யதார்த்தமானது. தூய்மையானது. கண்டிப்பாக அவசியமானது. இந்தக் காதலை ஒரு நோய் எதிர்ப்புசக்தி என்று உளவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.

“நீ எந்தக் குடும்பத்தில் பிறந்தாய் என்பது முக்கியமல்ல. எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கப் போகிறாய் என்பதே முக்கியமானது”.

- பாத்திமா நளீரா
Thinakaran Vaaramanjeri Feb-22-2015

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
    தங்களின் இக்கட்டுரை பலரின் கண்களை திறக்கும் என நம்புகிறேன். விவாகரத்து என்பது உலகெங்கும் பரவலாக, அதிகமாக நடந்து வருகிறது. அதில் நம் இஸ்லாமிய சமூகத்தில் இன்றைக்கு அதிகமாக நடப்பதற்கு காரணம் மார்க்க அறிவு இரு பாலாரிடம் அதிகமாக குறைந்துவிட்டது. இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கே என்பதை கூட நம் மக்கள் புரியாமல் நடந்துகொள்கிறார்கள். மண வாழ்க்கையைப்பற்றி இஸ்லாம் சொல்லும் சட்ட திட்டங்கள் யாருக்கும் சரியாக தெரியாததால் வரும் பிரச்சனைகள்தான் இந்த விவாகரத்து.

    ReplyDelete